குரு என்பதன் பொருள் என்ன?

குரு என்னும் சொல் கு (இருள்) மற்றும் ரு (ஒளி) ஆகியவற்றிலிருந்துப் பெறப்படுகிறது. குரு என்பவர் நம்மை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்பவர். உலகியல் ரீதியாகப் பார்த்தால், குரு என்பவர் ஒரு வல்லுநர், ஒரு விஷயத்தின் மேல் ஒளியைப் பாய்ச்சும் ஆசிரியர். நம்முடைய பள்ளி நாட்களிலிருந்து இன்றுவரை நமக்கு பல குருக்கள் இருந்திருக்கலாம், ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய அறிவை நமக்கு வழங்குபவர் எவராக இருந்தாலும் அவர் நமக்கு குரு ஆவார். எனினும் ஆன்மீகப் பாதையில், குரு என்பவர் ஆன்ம ஞானம் பெற்றவராகவும், இவ்வுலகின் அறியாமை சூழ்ந்த இருப்பிலிருந்து தெய்வீகத்தின் ஒளியை நோக்கி நம்மை அழைத்து செல்பவராகவும் இருக்கிறார். அவர் ஞானத்தை அடைந்தவர். அத்தகையவர் சத்குரு என்றும், அதாவது உண்மையான குரு, உண்மையை உணர்த்தும் குரு, என்றும் அழைக்கப் படுகிறார். சிவபெருமானிடமிருந்து தொடங்கும் அத்வைத குரு பரம்பரையானது காலம் காலமாக ஆன்மீக ஞானத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் ஞான குருமார்களின் வரிசையாகும்.

குரு என்பவர் ஒரு மனிதரா?

குரு என்பவர் ஒரு மனிதருள் அடங்குபவர் அல்ல. ஆழ்ந்த, முற்றும் கடந்த நிலையிலிருந்து பார்த்தால், குரு என்ற சொல்லில் இருக்கும்  கு என்பது குணாதீதம் (குணங்களை கடந்தவர்) என்பதையும், ரு என்பது ரூபவர்ஜித (வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர்) என்பதையும் குறிக்கும். குரு என்பது அனைத்து குணங்களையும், வடிவங்களையும் கடந்த தத்வம் ஆகும். அவர் சிவனிலிருந்தும், நம் ஆத்மாவிலிருந்தும் வேறுபட்டவர் அல்ல.

குரு என்பவர் உங்கள் நல்வாழ்வையும், இப்பாதையில் உங்கள் முன்னேற்றத்தையும் தவிர வேறெதையும் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. வாழ்வும் குருவும் பிரிக்க முடியாதவை. சரி-தவறைப் பிரித்துப் பார்க்க உதவும் ஞானமே எல்லோருள்ளும் உறையும் குரு தத்வமாகும்.

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

பிரபஞ்சத்தின் ஆதிகுருவாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

சிவபெருமான் என்பவர் யார்? சிவபெருமான் என்பவர் ஒரு மனிதரா?

சிவன் என்பவர் பூமியில் நடமாடிய ஒரு மனிதர் அல்ல. எங்கும் எப்போதும் நிறைந்து இருக்கும் பரம்பொருளே (தெய்வீகமே) சிவபெருமான் ஆவார். ஒவ்வொரு அணுவிலிருந்து பிரபஞ்சம் வரையும், அதற்கு அப்பாலும் இருப்பவர் அவர். நாம் ஆதிகுரு என சிவபெருமானை சொல்லும்போது, அது ஒரு பௌதிக வடிவம் அல்ல. சிவபெருமான் என்னும் குரு நம் அனைவர் உள்ளும் உறைந்திருந்து, நமக்கு வெளிச்சத்தையும் ஞானத்தையும் அளிக்கும் தெய்வீக ஒளியாகும். பரந்து விரிந்த இந்த பிரபஞ்ச வெளி  ஒரு வெற்றிடம் அல்ல, அதில் தெய்வீக விழிப்புணர்வு நிரம்பியுள்ளது; அனைத்து ஞானத்தையும் உள்ளடக்கியது இந்த வெளி. இந்த எல்லையற்ற விழிப்புணர்வே சிவன் என்னும் ஆதி குரு.

தட்சிணாமூர்த்தியின் மகத்துவம் என்ன?

புராணங்களில், சிவனின் குரு தத்வம் தட்சிணாமுர்த்தியாக உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது (தட்சிண-அமூர்த்தி).

தட்சிணாமூர்த்தி என்னும் சொல் மூன்று சொற்களை உள்ளடக்கியது:

  • அமூர்த்தம் என்றால் வடிவமற்றது, பார்க்கவோ, வெளிப்படுத்தவோ முடியாதது. சிவபெருமான் எங்கும் நிறைந்த உருவமற்ற பரம்பொருள் ஆவார்.
  • மூர்த்தி (சிலை என்று பொருள்) என்பது பார்க்ககூடியது, வடிவம் கொண்டது.
  • தக்ஷ (தட்ச) என்றால் திறன்மிக்கவர் அல்லது திறமையாளர் என்று பொருள்.

அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது கடினமே. சில சமயம், நாம் ஒரு மலரை அர்ப்பணிப்பதன் மூலம் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். உணர்ச்சிகளை முழுவதுமாக வெளிப்படுத்துவது முடியாத காரியமென்றாலும், நாம் சில முயற்சிகளை செய்கிறோம். அது தக்ஷிணை (திறன்) எனப்படுகிறது. வெளிப்படுத்தப்பட முடியாத அமூர்த்தம், அதாவது வடிவமற்ற முடிவிலி, ஒரு வடிவத்தில் திறமையாக வெளிப்படுத்தப் படுவதே தட்சிணாமுர்த்தி என்கிற மூர்த்தம் ஆகும்.

குரு தத்வம் வாழ்வில் இன்றியமையாதது. வரம்புக்கு உட்பட்டதும் (ஃபைனைட்) முடிவிலியும் (இன்ஃபைனைட்) ஒன்றாக இணையும் ஆதி குருவான தட்சிணாமூர்த்தி வரம்புக்கு உட்பட்டதில் திறமையாக நெய்யப்பட்டிருக்கும் முடிவிலியின் உருவமாவார். ஒவ்வொரு மனிதரிலும் குருவின் அம்சம் உறைகிறது. அந்த ஞானம் தட்டியெழுப்பப் பட வேண்டும்; அது தூண்டப் படவேண்டும்.

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

சிவபெருமான் எங்கும், எதிலும் இருப்பவர் என்றாலும், அவர் குருவின் உருவில் வருகிறார். எல்லையற்றவர் குருவின் வடிவெடுத்து வரும்பொழுது, தட்சிணாமூர்த்தி என அறியப்படுகிறார்.

பண்டைய காலத்திலிருந்தே குரு தத்வம் (தெய்வீக அம்சம் அல்லது தத்வம்) தட்சிணாமூர்த்தி என உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. குரு எனபவர் ஒரு மனிதர் அல்ல. உடலில் உறையும் ஒரு சக்தி; அச்சக்தியே தட்சிணாமுர்த்தி எனப்படுகிறது. நம்மை வழிநடத்தும் தெய்வீகமான, எங்கும் நிறைந்த, முடிவில்லாத சக்தி அது. அச்சக்தி வெளிப்படுத்தப்பட முடியாதது ஆயினும், நம் அனைவருள்ளும் வடிவெடுக்கிறது.

புராணங்களில் தட்சிணாமுர்த்தியின் சித்தரிப்பு

புராணங்களில், ஞானத்தை நாடும் முதிய சீடர்களின் நடுவே மௌனமாக அமர்ந்திருக்கும் இளைஞனாக தட்சிணாமூர்த்தி சித்தரிக்கப் பட்டுள்ளார்.  தட்சிணாமுர்த்தி பெருமான் ஒரு சொல் கூட பேசுவதில்லை; ஆயினும் அவருடைய சீடர்கள் ஞானத்தை பெறுகிறார்கள், அவர்களுடைய கேள்விகளெல்லாம் மறைந்து விடுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், பரம குருவின் சன்னிதியில் அவர்களுடைய சக்தி தன்னிச்சையாக மேலெழுகிறது. அதுதான் குரு தத்வம். எவரிடமிருந்து அனைத்து அறிவும், ஞானமும் வெளிப்பட்டதோ, அந்த ஆதி குருவே தட்சிணாமுர்த்தியாக வணங்கப் படுகிறார்.

தட்சிணாமூர்த்தியின் சின்னங்களின் உட்பொருள்

டமரூ – (சிறிய இருதலை மேளம்) – ஒலியை குறிக்கும் டமரூவை தன்னுடைய முதல் கரத்தில் தாங்கி இருக்கிறார்.

ஜபமாலை – அதே கரத்தில் அவர் தியானத்தைக் குறிக்கும் ஜபமாலையைத் தாங்கி இருக்கிறார். இது ஒலியிலிருந்து தியானத்திற்கு செல்லும் நிலையை குறிக்கிறது.

புத்தகம் – இரண்டாவது கரத்தில் ஞானத்தை குறிக்கும் புத்தகத்தை ஏந்தியுள்ளார்.

அபய முத்திரை – வெளிப்புறம் நோக்கி விரிந்திருக்கும் உள்ளங்கை, சீடர்களை பயமற்று, தைரியமாக இருக்க தட்சிணாமூர்த்தி ஆசீர்வதிப்பதைக்  குறிக்கிறது.

சின் முத்திரை – சில சமயம், சிலையில் அபய முத்திரைக்கு பதிலாக சின் முத்திரை (விழிப்புணர்வு அல்லது சித்தத்தின் ஒருமை) இருக்கக் கூடும். ஆட்காட்டி விரலால் குறிக்கப்படும் ஜீவாத்மா (தனிப்பட்ட ஆத்மா) கட்டை விரலால் குறிக்கப்படும் பரமாத்மாவை (பிரபஞ்ச விழிப்புணர்வை) கூடும்பொழுது, மற்ற மூன்று விரல்களால் குறிக்கப்படும் மூன்று குணங்களும் (சத்துவம், ரஜஸ், தமஸ்) சமநிலை அடைந்து, புறந்தள்ளப் படுகின்றன.

அக்னி – நான்காவது கரம் உற்சாகத்தைக் குறிக்கும் அக்னி அல்லது நெருப்பை ஏந்துகிறது. அது இக்கணத்தையும் குறிக்கிறது.

நெருப்பு இக்கணத்தை எப்படி குறிக்கிறது?

நெருப்பு இக்கணத்தில் மட்டுமே பற்ற முடியும். கடந்த காலத்தில் சேமித்த தண்ணீரை இக்கணத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், நெருப்பு தற்போதைய தருணத்தில் மட்டுமே இருக்க முடியும். ஆகவே, அக்னி எப்பொழுதுமே புதிதானது. குரு தத்வமானது, குரங்கு போல் தாவும் நம் மனத்திற்கு அமைதியைக் கொடுத்து, அத்தருணத்தின் புத்துணர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. குருவாகிய தட்சிணாமூர்த்தி வாழ்வின் கொதிப்பான தருணங்களை குளிர்வித்து, ஞானம் என்னும் அக்னியை மூட்டுகிறார். தட்சிணாமூர்த்தி என்னும் படிவத்தின் பொருள் சுவாரஸ்யமான, அறிவார்ந்த பல அடுக்குகளை உடையது.

அபஸ்மார அரக்கன் – சோம்பல், நோய் மற்றும் மனநோயை குறிக்கும் அரக்கனை குரு தத்வம் தன் காலடியில் வீழ்த்துகிறது.

இவ்வரக்கன் ஏன் கட்டுப்படுத்தப் படுகிறான், ஏன் முழுமையாக அழிக்கப் படவில்லை?

  • அபஸ்மாரனை சுதந்திரமாக விட்டுவிட்டால், அவன் அறிவைப் பெறுபவர்களை தாக்குவான். அவன் ஆணவம் கொள்வான், அதனால் அறிவின் மதிப்பு குறையும்.
  • அபஸ்மாரன் இறந்து விட்டால், மக்களிடம் அறிவு உதயமாகலாம். ஆனால் அவர்கள் அதன் மதிப்பை சரியாக உணராமல் போகலாம். இதனால் அறிவு புறக்கணிக்கப் படலாம்.
  • ஆகவே, அபஸ்மாரன் கட்டுப்படுத்தப்படுகிறான், அழிக்கப் படவில்லை. இதனால் அறிவிற்கு சரியான மதிப்பு கிடைக்கிறது, அதே சமயம் ஆணவமும் ஏற்படுவதில்லை.

நமக்கு ஏன் அறிவு தேவைப்படுகிறது?

வாழ்வின் அசுர அம்சங்களைக் கட்டுப்படுத்த அறிவு உதவுகிறது. இதன் மூலம், நாம் அறியாமையிலிருந்து மேலெழுகிறோம். ஆகவே, குரு தத்வம் நம்மை துக்கம், வலி, சோகம் மற்றும் பிரச்சினைகளிலிருந்து உயர்த்துகிறது. தன்னுடைய சீடர்களின் மனநிலையை அனைத்துப் பரிமாணங்களிலும் உயர்த்துகிறது.

சீடர்கள் தம் குருவை நினைக்கும்போது, அவர்கள் வாழ்வின் அசுர சக்திகள்  கட்டுப்படுத்தப் படுகின்றன.

திறமையாலும், ஞானத்தாலும் வாழ்வின் அசுர சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, ஆன்மாவில் நாம் நிலைப்பெற  முடியும் என்பதை தட்சிணாமூர்த்தி உணர்த்துகிறார்.

சுருக்கம்

நம் அனைவருள்ளும் உறையும் குரு தத்வமே தட்சிணாமூர்த்தி ஆவார். நம்முள் குரு தத்வம் மலர நாம் ஓய்வாக இருக்க வேண்டும், அதனுடன் இணப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், தியானம் செய்ய வேண்டும். நன்மை-தீமை போன்ற இவ்வுலகின் இருமைதன்மையில் சிக்கிக்கொள்ளாமல் காத்து, குரு தத்வம் மேலான ஒரு உணர்வு நிலைக்கு நம்மை உயர்த்துகிறது. அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, முன்னேற நம்மை அது ஊக்குவிக்கிறது. இப்பிரபஞ்சத்தின் முதல் குருவாகிய தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) நமக்கு அளிக்கும் செய்தியின் சாராம்சம் இதுதான்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *