குரு பரம்பரை என்பது குருக்களின் வம்சாவளியைக் குறிக்கிறது. இது சமூகத்தின் நலனுக்காக தலைமுறைகளைக் கடந்து ஞானத்தை பரப்ப ஏதுவாக இருந்தது. இது குருவிடமிருந்து சீடனுக்கு ஞானத்தை போதிக்கும் மரபு. இது இந்திய துணைக் கண்டத்திலிருந்து குரு குலங்களில் தொன்று தோட்ட ஞானத்தை பாதுகாத்த ஒரு நடைமுறை.
குரு பரம்பரையின் முக்கியத்துவம்
குரு-சிஷ்ய (குரு-சீடர்) பாரம்பரியம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும், மன வேதனையை குணப்படுத்தும் சக்தி கொண்ட அறிவை போதிப்பதை உறுதி செய்துள்ளது. இம்மாதிரி மன உளைச்சலில் தவிப்பது என்பதற்கு எந்த தலைமுறையுமே விதிவிலக்கு இல்லை.
ஒவ்வொரு பரம்பரையைச் செர்ந்த ஒவ்வொரு குருவும் நித்தியமான ஞானத்தை அவரவர் தலைமுறைக்கு பொருத்தமான முறையில் ஓதியுள்ளனர். ஒவ்வொரு குரு பரம்பரையும் உலகிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவற்றிலிருந்து சிறந்த வேதாந்தங்கள் வெளிவந்துள்ளன. மேலும், ஒவ்வொரு பாரம்பரியத்தில், குருக்கள் வியக்கத்தக்க ஆளுமைகளையும் பண்புகளையும் கொண்டிருந்தனர். அவர்களை நினைவு கூறுவது குறுகிய காலமாக இருந்தாலும் அவர்களின் குணங்கள் நம்மை எழுச்சியூட்டி மேம்படுத்துகிறது
அத்வைத குரு பரம்பரை
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மற்றும் அனைவரும் ஒரே விழிப்புணர்வு தான் என்று அத்வைத தத்துவம் கூறுகிறது. குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்குகிறார், “அத்வைத தத்துவம் என்பது அணு இயற்பியல் (quantum physics) போன்றது, இது எல்லாம் அலை செயல்பாடு மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறது. வேதியியலில், பல தனிமங்கள் மற்றும் அவற்றின் பரிணாமங்கள் isotopes) உள்ளன. ஆனால் ஒரு அணு இயற்பியலாளருக்கு, ஒரு தனிம அட்டவணை (periodic table) இல்லை. எல்லாமே அணுக்கள்தான்.”
அத்வைத குரு பரம்பரை என்பது புனிதமான அத்வைத தத்துவத்தின் குருக்களின் பரம்பரையாகும். ஆதி சங்கராச்சார்யார், வேத வியாசர் மற்றும் மகரிஷி வசிஷ்டர் போன்ற புகழ்பெற்ற குருக்கள் இந்த அத்வைத பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பங்களிப்புகள் அத்வைத ஞானத்தை யுகங்களாக உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது. உபநிடதங்கள் ,பகவத் கீதை போன்ற வேதங்களின் ஞானம் மற்றும் பிற ஞான மூலங்கலின் ஆன்மீக அனுபவங்களைக் கற்பிக்க இந்த பரம்பரை காரணமாக உள்ளது.
அத்வைத குருமார்களின் சுவாரஸ்யமான கதைகள்
ஆதியில் முதல் குருவான நித்திய உணர்வான சிவன் மட்டுமே இருந்தார். விழிப்புணர்வின் சின்னமான ஆதிசேஷனின் துணையுடன் நாராயணன் இந்த விழிப்புணர்வுக் கடலில் மிதந்தார். நாராயணன் தன்னைச் சுற்றியுள்ள விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்தபோது, பிரபஞ்சத்தின் படைப்பு உள்ளுணர்வான பிரம்மதேவன் பிறந்தார். அதன்பிறகு, பிரம்மதேவன் பல வடிவங்களாக மாறினார். சிவன், நாராயணன் மற்றும் பிரம்மா ஆகிய சூட்சும சக்திகள் படைப்பின் செயல்பாட்டை நிர்வகிக்கின்றன.
ஒரு “மனஸ் புத்திரன் ” (மனதில் பிறந்த மகன்) அல்லது தனிப்பட்ட உணர்வு பிரம்ம உணர்விலிருந்து பிறந்தது. அந்த உணர்வு அல்லது மகன்தான் மனிதர்களில் மிகவும் ஞானம் பெற்ற ரிஷி வசிஷ்டர். ரிஷி வசிஷ்டர் ஸ்ரீ ராமருக்கு உலகின் கடமைகளைச் செய்யும்போது எவ்வாறு நடு நிலைமையுடனும், சலனம் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டினார். ரிஷி வசிஷ்டருக்கும் ஸ்ரீ ராமருக்கும் இடையிலான உரையாடல் “யோக வசிஷ்டம்” என்ற நூலில் உள்ளது. இது உலகின் மாயையான இயல்பைப் பற்றிய ஒரு நூலாகும்.
ரிஷி வசிஷ்டரின் மகன் சக்தி, அவருக்குப் பிறகு ரிஷி பராசரர் வந்தார், அவர் காலம், வானியல், ஜோதிடம், மருத்துவம் மற்றும் வேத சடங்குகள் பற்றிய முழுமையான அறிவைக் கொண்டிருந்தார். ரிஷி பராசரர் ஒரு மீனவப் பெண்ணை மணந்து அவளுடன் கிருஷ்ண துவைபாயன வியாசர் என்ற மகனைப் பெற்றார், அவர் அத்வைத குரு பரம்பரையின் வரலாற்றில் மிகப் பெரிய அறிஞர்களில் ஒருவராக இருந்தார்.
வியாச முனிவர் வேதங்களை தொகுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள ரிஷிகளைச் சந்திக்க இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பயணம் செய்தார். அவர் வேதங்களின் 1180 கிளைகளை அறிந்திருந்தார். அவர் வேதாந்த சூத்திரங்களை (அதாவது உபநிடதங்களின் சுருக்கம்), மகாபாரதத்தின் ஒரு பகுதியான பகவத் கீதை, யோகசூத்திரங்கள், வியாசபாஷ்யம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை எழுதிய மூல கர்த்தா ஆவார்.
வியாச முனிவருக்குப் பிறகு அவரது மகன் சுகதேவர் இந்த பரம்பரையில் வந்தார், அவரது வருகை ஒரு சுவாரஷ்யமான கதையைக் கொண்டுள்ளது. ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார், கதையின் நடுவில் பார்வதி தேவி உறங்கிவிட்டார். இதற்கிடையில் ஒரு கிளியும் அந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தது. கதையின் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட அந்த கிளி இறைவன் தனது கதையைத் தொடர வேண்டும் என்று விரும்பியது. எனவே அது, அவர் பார்வதி தேவியின் குரலைப் போல ஒலி கொடுக்கத் தொடங்கியது. பகவான் கதையை முடித்த பின்னர்,, பார்வதி தேவி உறங்கிவிட்டதைக் கவனித்தார், வேறு யாரோ ஒருவர் கதைக்கு ஆம் என்று குரல் கொடுத்திருப்பதை உணர்ந்தார்.
அது யார் என்று பார்த்தார் – அது கிளி என்று உணர்ந்தார். ஆத்திரமடைந்த அவர் கிளியைத் துரத்திக்கொண்டு ஓடினார். அந்த கிளி வியாசர் மற்றும் அவரது மனைவியும் வசித்த குடிலில் ஒளிந்து கொண்டது. வியாச முனிவர் கிளியின் சார்பாக சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு அதற்கு அடைக்கலம் கொடுத்தார். கிளியின் ஆன்மா வியாச முனிவரின் மனைவியின் கருப்பைக்குள் நுழைந்தது . பின்னாளில் சுகதேவன் என்று அழைக்கப்பட்ட அந்த ஆத்மா, இந்த உலக மாயையில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் பிறக்க மறுத்து, கருவில் இருக்கும் போதே தனது தந்தையின் சொற்பொழிவுகளிலிருந்து ஞானத்தை பெற முற்பட்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சுக தேவர் பிறந்தார், பின்னர் அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் மகாராஜாவிற்கு ஸ்ரீமத் பாகவதம் என்ற பக்தி நூலை உபதேசித்தார். கலியுகத்திற்கு இறுதி தீர்வாகக் கருதப்படும் இந்த புனித நூல், விஷ்ணு பகவான் மற்றும் அவரது அவதாரங்களில் குறிப்பாக பகவான் கிருஷ்ணரின் கதைகளின் தொகுப்பாகும்.
அதேபோல், பல குருமார்கள் அத்வைத குரு பரம்பரையை சார்ந்தவர்களாக உள்ளனர். அத்வைத தத்துவம் ஆழமான வியக்கத்தக்க ஞானத்தை கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் மூலத் தத்துவத்தை விட சடங்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றபோது வெகுஜனங்களிடையே அதன் மதிப்பையும் பிரபலத்தையும் இழக்கத் தொடங்கியது.
ஆதி சங்கராச்சாரியார் : அத்வைத தத்துவத்திற்கு புத்துயிர் அளித்த குரு
கிபி 7 ஆம் நூற்றாண்டில், ஆதி சங்கராச்சாரியார் தனது குரு கோவிந்த பகவத்பாதரை, தற்போதய மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா ஆற்றின் கரையில் சந்தித்தார். குரு கோவிந்தர் ஆதி சங்கராச்சாரியாரிடம், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆதி சங்கராச்சாரியார் “நிர்வாண சதகத்தை” இயற்றினார், அதன் தொடக்க பத்தி பின்வருமாறு.
मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे ।
न च व्योम भूमिर्न तेजो न वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥
மனோபுத்த்யஹங்கார சித்தானி நாஹம்
ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராணநேத்ரே ।
ந ச வ்யோம பூமிர்ந தேஜோ ந வாயு꞉
சிதானந்தரூப꞉ சிவோஹம் சிவோஹம் ॥ 1 ॥
நான் மனமோ, அறிவோ, அகங்காரமோ அல்ல.
நான் கேட்கும் (காதுகள்), சுவைக்கும் (நாக்கு), முகர்தல் (மூக்கு) அல்லது காண்பதற்கான (கண்கள்) உறுப்புகள் அல்ல.
நான் வானமோ, பூமியோ, நெருப்போ, காற்றோ அல்ல.
நான் சிவம், உணர்வு -. சைதன்ய சக்தியின் இயற்கயான பரம் மங்களகரமான ஆனந்தம் ஆவேன்
நானே (சிவம்) மங்களகரமானவன்.
குரு கோவிந்த், தன் சீடனைக் கண்டு மகிழ்ந்தார். அவனுக்கு துறவறம் வழங்கினார். காலப்போக்கில், குரு கோவிந்த், சனாதன தர்மத்தை மறுசீரமைக்க உதவும் பணிகளை ஆதி சங்கராச்சாரியாரிடம் ஒப்படைத்தார். அழிந்து கொண்டிருந்த அத்வைத சாஸ்திரங்களுக்கு சங்கராச்சாரியார் புத்துயிர் அளித்தார். மறந்து போன உபநிடத அறிவை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றார். இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நான்கு ஜோதிர் மடங்களை அவர் நிறுவினார்.
ஆதி சங்கராச்சாரியாரின் சீடர்கள் மற்றும் பிற்கால குருமார்கள் அத்வைத தத்துவத்தின் அறிவைப் பராமரிக்க உதவியுள்ளனர். நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர நமக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்பதற்காக அவர்களுக்கு நம் நன்றிகளை சமர்பிப்போம்!
இந்த கட்டுரை சுவாமி ஹரி ஹராவின் உள்ளீடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.





