சிலர் மிகவும் கடினமாக உழைத்தும் வெற்றி பெறுவதில்லை. உங்களைச் சுற்றி இவ்வாறு நடப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் அவர்களிடம் ஏதோ ஒன்று விடுபட்டுள்ளது. அவர்களுக்குள் பலவீனமான ஒரு எதிர்மறை அதிர்வு உள்ளது; இந்த எதிர்மறை அதிர்வுகளை நீக்க தியானம் அவசியம்.
தியானத்தின் பயன்கள்
தியானம் செய்வதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. உயிர் சக்தி அதிகரிக்கிறது, அறிவு கூர்மையடைகிறது, மற்றவர்களுடனான நமது தொடர்புகள் மிகவும் சுமூகமாகின்றன. பேசுவதில் தெளிவு பிறக்கிறது.
மனதின் சங்கல்ப சக்தி வலிமையடைகிறது. தியானம் உங்கள் விதியையே மாற்றுகிறது.
தியானம் ஒருவரின் கண்ணோட்டத்தை மாற்றவும் அதன் மூலம் உங்கள் ஆளுமையையும் மாற்ற உதவுகிறது. தியானம் செய்பவர் அமைதியாகவும், நிதானமாகவும், வலிமையாகவும், ஆனால் கனிவாகவும், இரக்கமுள்ளவராகவும் மாறுகிறார். இது விஷயங்களை நீங்கள் உணரும் விதத்தை மேம்படுத்துகிறது. மனதில் தெளிவைக் கொண்டுவருகிறது. சுற்றியுள்ள மக்களுடனான உங்கள் தொடர்புகளை மேம்படுத்துகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் மற்றும் எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதிலும் தியானம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் தியானம் செய்தால், நம் மீது தெய்வீக அன்பு பொழிவதை அனுபவிக்க முடியும். அறிவு, உணர்தல் மற்றும் அன்பு – இந்த மூன்று விஷயங்களும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. யாரும் மந்தமான மற்றும் சலிப்பான வாழ்க்கையை விரும்புவதில்லை. அனைவரும் ஒரு சுவாரசியம் நிறைந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள் — அந்த சுவாரசியம்தான் “அன்பு.
தியானம் உங்களைச் சுற்றியுள்ள மக்களுடனான உங்கள் தொடர்புகளை மேம்படுத்துகிறது – நீங்கள் என்ன சொல்கிறீர்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் ஆகியவற்றில் தெளிவு பெறுகிறீர்கள்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
வெற்றியின் திருப்புமுனை
நமக்குள் எந்த நேர்மறை அதிர்வுகளும் இல்லாமல் எதிர்மறை அதிர்வுகளால் நாம் நிரப்பப்பட்டிருந்தால், அன்பின் பூரணத்துவத்தை அனுபவிக்க முடியாது. அன்பை அதன் சிதைந்த வடிவங்களில் அதாவது, கோபம், வெறுப்பு, அமைதியின்மை ஆகியவற்றில் மட்டுமே நாம் அனுபவிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும். எனவே இந்த சிதைவுகளிலிருந்து மனதைத் தூய்மைப்படுத்தும் முறையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மனம் இந்த சிதைவுகளிலிருந்து விடுபட்டவுடன், வாழ்க்கையில் உள்ள அனைத்தும் சரியான விதத்தில் இயங்கத்துவங்கும். இது தனிமனிதனுக்கானது
காலை எழுந்தவுடன், வேலையைத் தொடங்குவதற்கு முன், 10 நிமிடங்கள் நிமிடங்கள் அமைதியாக அமருங்கள். மாலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, நாம் அனைவரும் உணவு உண்கிறோம். ஆனால் இரவு உணவிற்கு முன், சிறிது நேரம் அமர்ந்து, உள்ளுக்குள் ஆழமாகச் சென்று சுயத்தில் ஓய்வெடுங்கள். பின்னர் விஷயங்கள் மாறத் தொடங்கும்.
மன ஆரோக்கியம் மூலம் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறுதல்
இன்றைய சூழ்நிலைகளிலும், தற்போதைய வாழ்க்கை முறையிலும் கூட, தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனநிறைவைத் தரக்கூடிய, நம் வேலையில் நமக்கு உதவக்கூடிய ஏதேனும் ஒன்று இருக்கிறது என்றால், அது தியானமும் நம்பிக்கையும்தான்.
இந்த நான்கு சூத்திரங்களின் மீது உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம், நீங்கள் எளிதாக ஆழ்ந்த தியானத்தில், சமாதிக்குள் ஆழ்ந்துவிடுவீர்கள். அவை: தெய்வீகம் சர்வத்ரம் (எங்கும் நிறைந்தது); சர்வதா (நித்தியமானது); அனைவருக்கும் சொந்தமானது; மற்றும் சர்வ சக்தி வாய்ந்தது. தெய்வீகம் எனக்கானது. இந்த உணர்வுடன் காலையிலும் மாலையிலும் சில நிமிடங்கள் ஓய்வெடுத்து தியானிக்கவும் நாம் பழக்கப்படுத்திக் கொண்டால், அற்புதங்கள் நிகழ ஆரம்பிக்கும் — தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். இதுவே நம்பிக்கை. காண முடியாதது, ஆனால் உணரமுடிவது நம்பிக்கை.
இன்று நமக்கு மனநிறைவைத் தரக்கூடிய, நம் வேலையில் நமக்கு உதவக்கூடிய ஏதாவது இருந்தால், அது தியானம் மற்றும் நம்பிக்கை மட்டுமே.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
எட்டு வாரங்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை 20 நிமிடங்கள் தியானம் செய்தால், நமது சிறுமூளையில் உள்ள திசுக்கள் அதிகரித்து, மூளையின் அமைப்பு மாறுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இன்று, ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும், மன அழுத்தம் காரணமாக இந்த பூமியில் ஏழு உயிர்களை இழக்கிறோம். அதைத் தவிர்க்கலாம். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழி தியானம்.
இதயப்பூர்வமான தொடர்புக்கு
மக்களிடையே நம்பிக்கை இருக்கும்போது, தொடர்பு ஏற்படுகிறது. நம்பிக்கை உடைக்கப்படும்போது, தொடர்பு உடைந்து பெரும் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு குடும்பத்தில், உறவில், வணிகத்தில் அல்லது நாடுகளுக்கு இடையே, மூன்று விஷயங்கள் முக்கியம் : தொடர்பு, தொடர்பு மற்றும் தொடர்பு. தொடர்புக்கு மூன்று நிலைகள் உள்ளன: நேருக்கு நேர், இதயத்திற்கு இதயம் மற்றும் ஆன்மாவிற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு. தியானம் என்பது ஆன்மாவிற்கும் ஆன்மாவிற்கும் இடையிலான தொடர்பு.
நாம் எப்படி அமைதியை உருவாக்குபவர்களாக மாற முடியும்
மன அமைதி இல்லையென்றால் வெளிப்புற அமைதி இருக்க முடியாது. தியானம் உள் அமைதியை உறுதி செய்கிறது. உள்ளே அமைதி இருக்கும்போது, வெளியேயும் அமைதியை அடைய முடியும். நீங்கள் குழப்பத்துடனும், விரக்தியுடனும் இருந்தால், அமைதியை வெளியே உருவாக்க முடியாது.
வெறும் வார்த்தைகள் மட்டும் அமைதியை வெளிப்படுத்துவதில்லை. அமைதி என்பது ஒரு அதிர்வு. நீங்கள் அமைதியாகவும், உள்ளுக்குள் ஆழமாகவும் இருக்கும்போது, உங்கள் வலிமை பல மடங்கு அதிகரிக்கிறது.
நீங்கள் வலுவாக இருக்கும்போது, எந்த இடத்திற்கும் சென்று அமைதியைப் பற்றி பேசலாம். தியானம் உங்களுக்கு மன வலிமையைத் தருகிறது, மேலும் அது உங்களைச் சுற்றி அமைதிப்படுத்தும் அதிர்வுகளைப் பரப்புகிறது. அதனால்தான் அமைதிக்கு தியானம் அவசியம்.
தியானம் தனிநபரிலும், அவரது நடத்தையிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இது அமைதியின் அதிர்வுகளைப் பரப்புகிறது. நீங்கள் தியானம் செய்பவராக இருக்கும்போது, மற்றவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நேர்மறை மற்றும் அமைதியின் அதிர்வுகளை உங்களைச் சுற்றி ஏற்படுத்துகிறீர்கள்.
சபிக்கும் சக்தி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
தியானம் செய்பவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் யாரையும் எந்த நேரத்திலும் சபிக்கக்கூடாது. அவர்களது பேச்சில் முடிந்தவரை எதிர்மறை வார்த்தைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
நீங்கள் தியானம் செய்யும்போது, ஆசீர்வதிக்கும் திறனையும் சபிக்கும் திறனையும் பெறுவீர்கள். முதலில் சபிக்கும் திறன் வரும், பின்னர் ஆசீர்வதிக்கும் திறன் வரும். ஆனால் ஒரு சில கெட்ட வார்த்தைகளால் தியானத்திலிருந்து வரும் நல்ல ஆற்றலில் பெரும்பகுதி வீணாகிவிடும் இது ஒரு புத்திசாலித்தனமான செயல் அல்ல. தியானம் அதிக சக்தியைத் தருகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
போர் என்பது ஒருவரின் மனதில் உருவாகிறது. யாரோ ஒருவரின் இதயத்திலிருக்கும் ஒரு நீண்ட நாட்களாக மனதில் உள்ள விபரீதமாக திரிக்கப்பட்ட கேள்வி ஆக்கிரமிப்பாகவும் வன்முறையாகவும், வெளிப்படுகிறது. இது காற்றில் உருவாகாது. மனிதர்களின் இதயங்களிலும், மனங்களிலும் உருவாகிறது. அது முதலில் தனிநபரிடம் தொடங்கி, பின்னர் குடும்பத்திலும், சமூகங்களிலும் பரவுகிறது. பின்னர் அது காட்டுத்தீ போல் எரிகிறது.
இந்தப் பிரச்சினைக்கான மூல காரணத்தை நாம் பார்க்க வேண்டும். நோய் பரவும்போது, மக்கள் இல்லாமல் ஒரு நாட்டில் அது பரவுவதில்லை. நோய் மக்களிடமே பிறக்கிறது. அதேபோல், போர் மக்களின் மனங்களில்தான் உருவாகிறது.
கூட்டத்தின் மன இயல்பு என்று ஒன்று இருந்தால், அதாவது, ஒரு மனிதனின் கோபம் பலரைத் தாக்கலாம் அல்லது பரவலாம். மேலும், கூட்ட வன்முறை நடக்கலாம் என்றால், கூட்ட வன்முறை ஒரு நபரின் மனதிலோ அல்லது இரண்டு பேரின் மனதிலோ உருவாகிறது. பின்னர் அது முழு குழுவிலும் பரவுகிறது. அமைதியிலும் இதுவே நடக்கலாம்.
உலகம் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது: ஆக்கிரமிப்பு மற்றும் மனச்சோர்வு. ஒன்று ஆக்ரோஷமாக இருந்து சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்துகிறது அல்லது மனச்சோர்வடைந்து தற்கொலைக்கு வழிவகுக்கும் வகையில் தனக்குத்தானே வன்முறையை உருவாக்கிக் கொள்கிறது. தியானம்தான் இந்த சவால்களுக்கு பதில்.





