பல ஆண்டுகளுக்கு முன்னால் வயதான நான்கு மனிதர்கள் தங்கள் ஐயங்களுக்கு பதில்களை தேடிக்கொண்டு இருந்தார்கள். முதலாமவர் பரிதாபகரமாக இருந்தார், அவர் தனது துயரத்திலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை அறிய விரும்பினார். இரண்டாமவர் அதிக முன்னேற்றம் மற்றும் வெற்றியை விரும்பினார், அதை எவ்வாறு பெறுவது என்பதை அறிய விரும்பினார். மூன்றாமவர் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய விரும்பினார். நான்காமவர்க்கு எல்லா அறிவும் இருந்தது, ஆனால் இன்னும், அவரிடம் ஏதோ குறைபாடு இருந்தது, அது என்னவென்று அவருக்கு தெரியவில்லை.
எனவே இந்த நான்கு பேரும் விடை தேடி அலைந்து கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு ஆலமரம் இருந்தது. ஆலமரத்தடியில் ஒரு இளைஞன் மலர்ந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தான், திடீரென்று இவன் நமது ஐயங்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று எல்லோரும் நினைத்தார்கள். இந்த நபர் தங்கள் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறார் என்று நால்வரும் நினைத்தனர். நால்வரும் அங்கே உட்கார்ந்தார்கள் புன்னகையுடன் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த இளைஞன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் அவரவர்கள் விரும்பிய பதில் கிடைத்தது!
இதுதான் குரு பூர்ணிமாவைப் பற்றிய முதல் கதை. அது ஒரு பௌர்ணமி நாள், அப்படித்தான் குரு பரம்பரை (குரு வரிசையின் பரம்பரை) தொடங்கியது. இந்த நான்கு முதியவர்களும் குருக்கள் ஆனார்கள்.
அவர்கள் அனைவரும் விரும்பியதைப் பெற்றனர்:
- துயரம் போய்விட்டது
- செழிப்பும் மகிழ்ச்சியும் வந்தது
- தேடல் நின்றது
- அறிவாளி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு குருவைப் (ஆசானைப்) பெற்றான்
அந்த நான்காவது மனிதனுக்கு எல்லாம் இருந்தது, அவனுக்கு எல்லா அறிவும் இருந்தது, ஆனால் அவற்றை ஒன்றிணைக்க ஒரு குருதான் இருக்கவில்லை. அதனால் குருவுடனான உள் தொடர்பு ஏற்பட்டது.
அதனால்தான் ஆதி சங்கராச்சாரியார் “மௌன வியாக்யா ப்ரகடித, பரபிரம்ம தத்வம் யுவானம்” என்றார். (பொருள்: “பரபிரமத்தின் உண்மைத் தன்மையை அவரது மௌன நிலையின் மூலம் விளக்கும் முதல் குருவான தட்சிணாமூர்த்தியை போற்றி வணங்குகிறேன்”).
கதையின் குறியீடு (உட்கருத்து)
ஆத்மா எப்போதும் இளமையாக இருப்பதால் கதையில் ஆசிரியர் இளமையாக இருக்கிறார். அதே நேரத்தில் மாணவர்கள் வயதானவர்கள். இத்துடன் தொடர்புடைய பல உவமைகள் உள்ளன. தேடல் உங்களை முதுமையடையச் செய்கிறது. உலகத்தைத் தேடுவதோ, முக்தியைத் தேடுவதோ, வேறு எதற்காகவுமே தேடுவதோ உங்களை முதுமையடையச் செய்கிறது. எனவே மாணவர்கள் வயதானவர்களாகவும், ஆசிரியர் இளைஞராகவும் இருந்தனர்.
ஆலமரம் எதனைக் குறிக்கிறது? ஒரு ஆலமரம் தானாகவே வளர்கிறது. இதற்கு யாருடைய கவனிப்போ பாதுகாப்போ தேவையில்லை. ஒரு ஆலமரத்தின் விதை அதிக நீர் இல்லாத கல்லின் வெடிப்புக்குள் நுழைந்தால் கூட, அங்கேயும் வளரும். அதற்குத் தேவையானது சிறிதளவு சேறும் மிகக் குறைந்த தண்ணீரும் மட்டுமே. சில நேரங்களில் அதுவும் தேவையில்லை. மேலும் ஒரு ஆலமரம் எப்போதும் பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வழங்கும். 24 மணி நேரமும் ஆக்சிஜன் கொடுக்கும் மரம் இது. தன்னுள் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும் தன்மைதான் குரு தத்துவத்தின் அடையாளம்.
குரு என்றால் இருள், துயரம், தனிமை, இல்லாமை ஆகியவற்றை அகற்றி, குறைகள் மனதளவில் மட்டுமே இருப்பதால் அதையும் நீக்கி சுதந்திரத்தையும் இன்பத்தையும் கொண்டு வருபவர். குரு என்பவர் இல்லாமையை நீக்கி முக்தியை தருகிறார்.





