மன உளைச்சல் மற்றும் கவலையிலிருந்து மீள்வதற்கான தூரம் ஒரு யோக நுட்ப தூரமே ஆகும்.
மன அழுத்தம், பயம், பதட்டம் – நம் வாழ்க்கையில் இந்த உணர்ச்சிகளை எவ்வளவு முறை அனுபவித்து உள்ளோம் என்பது கணக்கில் அடங்காது! தேர்வின் முடிவைப் பற்றி கவலை கொள்ளல், நம்முடைய மதிப்பெண்களை பார்த்து நம் பெற்றோர்கள் கோபப்படுவார்களோ என்ற அச்சம், முதல் முதலில் காதலரை சந்திக்கும் போதோ அல்லது முதல் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும் போதோ ஏற்படும் பதட்டம் – இம்மாதிரியான தருணங்களை நாம் வாழ்வில் சந்தித்திருக்கிறோம். எந்த நிலையிலும், சிறிதளவு பயம் இருப்பது சாதாரணமானது. இது உணவில் சிறிதளவு உப்பு உள்ளதை போன்றது; இந்த பயம், நாம் ஒழுக்கத்துடனும், கவனம் குறையாமல் இருக்கவும், உத்வேகத்துடன் இருக்கவும் தேவைப்படுகிறது.
இந்த பயம் எப்போதும் ஓயாமல், கட்டுக்கடங்காமல், அளவுக்கு மீறி நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கும் போதுதான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. அப்போது மன அழுத்தக் குறைபாடாகிறது. அளவுக்கு மீறின அமைதியின்மை, கவலை, பயம் ஏற்படுவதால் சிகிச்சை தேவைப்படுகிறது. இம்மாதிரியான நிலையில்தான் மன உளைச்சலிலிருந்து மீள யோகா உதவுகிறது.
யோகா மட்டுமே ஒரே தீர்வு என்று கொள்ள வேண்டாம். மற்ற மருந்துகள், மற்றும் மருத்துவர், நிபுணர்களின் பரிந்துரைகளுடன் அளிக்கப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ளுவது நல்ல தீர்வு. மன உளைச்சல் குறைபாடுகளில் பல விதங்கள் உண்டு: அதிர்ச்சி மனநோய் (Panic Disorder), பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (Obsessive-Compulsive Disorder), ஒரு கொடிய நிகழ்ச்சிக்கு பின் ஏற்படும் மனஉளைச்சல் சீர்குலைவு (Post-Traumatic Stress Disorder), சமூக அச்சக் கோளாறு (Social Anxiety Disorder), பொதுவான கவலைக் கோளாறு (Generalized Anxiety Disorder) போன்ற பல விதமான கோளாறுகள் உள்ளன. அதற்கேற்றவாறு மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
குறிப்பு: அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
உங்களுக்கு கவலைக் கோளாறு இருக்கிறதா என்பதை அறிய சில அறிகுறிகள்:
- அசாதாரணமான பீதி, பயம் மற்றும் மனக் கலக்கத்துடன் இருப்பதை உணர்கிறீர்கள்.
- கடந்தகால அதிர்ச்சியூட்டும் அனுபவங்களின் கட்டுப்பாடு இல்லாத எண்ணங்களால் பாதிக்கப்படுகிறீர்கள்.
- கெட்ட கனவுகளால் திடுக்கிட்டு எழுகிறீர்கள்.
- நீங்கள் உங்கள் கைகளை மீண்டும் மீண்டும் கழுவுகிறீர்கள்.
- தூங்குவதில் உங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.
- உங்கள் கைகளும் கால்களும் வழக்கத்திற்கு மாறாக வியர்க்கிறது
- அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது
பதட்டத்தை நீக்க யோகா எவ்வாறு உதவுகிறது?
யோகப் பயிற்சியை பழக்கிக் கொள்வதால், அது நமது அன்றாட வாழ்வில் அமைதியாகவும், ஓய்வாகவும் இருக்க உதவுகிறது. மேலும் அது நம் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளை, மனச்சோர்வு அடையாமல் தைரியமாக எதிர்கொள்ளும் வலிமையையும் உங்களுக்கு வழங்குகிறது. ஆசனங்கள் (உடல் தோரணைகள்), பிராணாயாமம் (சுவாச நுட்பங்கள்), தியானம் மற்றும் பண்டைய யோக தத்துவம் போன்ற பலவும் சேர்ந்ததுதான் யோகப் பயிற்சி. இவை அனைத்தும் பல மன அழுத்த நோயாளிகளை மன அழுத்தத்திலிருந்து மீண்டு வரவும், வாழ்க்கையை புதிய நேர்மறை எண்ணங்களுடனும் மற்றும் வலிமையுடனும் நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் உதவியுள்ளன.
இல்லத்தரசி சுஷாமா கோயல் பகிர்ந்து கொள்கிறார், “நான் எப்போதும் பதட்டத்துடன் வாழ்க்கையில் சின்னஞ்சிறிய விஷயங்களைப் பற்றியும் கவலை படுவேன். சிறியதோ பெரியதோ எந்த ஒரு நிகழ்வும் என்னை போட்டு உலுக்கும். என் கணவர் ஒரு மருத்துவரை அணுக முடிவு செய்தார், எனக்கு பொதுவான கவலைக் கோளாறு (generalized anxiety disorder) இருப்பதாக மருத்துவர் எங்களிடம் கூறினார். சுமார் ஆறு மாதங்கள் இந்த கவலைக்கான சிகிச்சையையுடன், யோகா மற்றும் தியானப் பயிற்சியையும் மேற்கொண்டேன். இன்று நான் புனர் ஜென்மம் பெற்றதாக உணர்கிறேன். என் சிந்தனையின் போக்கே மாறிவிட்டது. நான் உள்ளிருந்து மிகவும் உறுதியாக இருப்பதை உணர்கிறேன். என்ன நடந்தாலும் நன்மைக்கே என்று நான் திடமான நம்பிக்கையோடு இருக்கிறேன். இனி எதிர்காலத்தைப் பற்றி பயமில்லை! யோகா எனக்கு இந்த வலிமையைக் கொடுத்துள்ளது.”
சுஷாமாவைப் போல நீங்களும் யோகப்பயிற்சி மூலம் பயத்தை வென்று, நேர்மறை எண்ணங்கள் மிகுந்த வாழ்க்கையை வரவேற்கலாம்.
நிம்மதி இன்றி உழன்று கொண்டிருக்கும் மனத்தில் அமைதி கொண்டு, கவலை கோளாறிலிருந்து நிவாரணம் பெற கீழ் கண்ட யோகா பயிற்சிகள் இயற்கையாகவே உதவும்:
கவலையை முறியடிக்க 9 யோகா அறிவுரைகள்
- யோகாசனங்கள் செய்து மன அழுத்தத்தை போக்குங்கள்
- கவலையைப் போக்க பிராணாயாமங்களுடன் சரியான முறையில் சுவாசியுங்கள்.
- உங்களுக்கு கிட்டிய தளர்வான மனம் என்னும் பரிசை அனுபவிக்க….
- யோகா தத்துவத்தை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள்
- பிரார்த்தனை செய்து, நம்பிக்கையுடன் புன்னகை மாறாமல் இருங்கள்
- மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்
- உலகின் நிரந்தரமற்ற தன்மையை உணருங்கள்
- கடந்த காலத்தில் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
- நேர்மறையாக இருப்பவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள்
1. யோகாசனங்கள் செய்து மன அழுத்தத்தை போக்குங்கள்
கீழ்கண்ட யோக ஆசனங்கள் மன அழுத்தத்தையும், எதிர் மறையான எண்ணங்களையும் நீக்குகின்றன.
- தனுர் ஆசனம்
- மத்ஸ்யாசனம்
- ஜானு சிரசாசனம்
- சேது பந்த ஆசனம்
- மார்ஜரி ஆசனம்
- பஸ்ச்சிமோத்தான ஆசனம்
- ஹஸ்த பாதாசனம்
- அதோ முக சுவநாசனம்
- சிரசாசனம்
- சவாசனம்
குறிப்பு: யோகா பயிற்சி முடிந்தவுடன், யோக நித்திரையில் படுத்து, உங்கள் உடலுக்கும், மனதிற்கும் சிறிது நேரம் ஓய்வளியுங்கள். மன அழுத்தத்திற்கு முதன்மையான காரணமாக இருக்கும் உடலில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற இந்த நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்.
2. கவலையைப் போக்க பிராணாயாமங்களுடன் சரியான முறையில் சுவாசியுங்கள்.
சுவாசத்தில் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் பதட்டத்தை வளர்க்கும் தேவையற்ற எண்ணங்களின் ஒழுங்கீனத்திலிருந்து மனதை விடுவிக்க உதவும். பின்வரும் சுவாச நடைமுறைகளை முயற்சிக்கவும்:
- கபாலபாத்தி பிராணாயாமம்
- பஸ்திரிகா பிராணாயாமம்
- நாடிஷோதன பிராணாயாமம்
- பிரமரி பிராணாயாமம்
3. தளர்வான மனதை அனுபவிக்க தியானம் செய்யுங்கள்
அங்குமிங்கும் அலைபாயும் மனதை நிதானப்படுத்தவும், நிம்மதியையும் அமைதியையும் அளிக்க தியானம் ஒரு சிறந்த நுட்பமாகும். தினமும் தியானிப்பதினால் உங்களைச் சுற்றியுள்ள சிறிய, அற்ப விஷயங்களில், உங்களை ஈடுபடுத்த உங்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் உணரமுடியும் . அறியப்படாத எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப் படாமலும், மனஉளைச்சல் படாமலும் இருக்க, இது உங்களுக்கு உதவும். பதட்டத்திலிருந்து விடுபட, தியானம் எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
‘அட்ரீனல் சுரப்பியின் உந்துதல்’ (‘Adrenaline rush’) என்ற சொற்றொடரை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். வரவிருக்கும் சாத்தியமான அச்சுறுத்தலைப் பற்றி நாம் மிகவும் கவலைப்படும்போது இது நிகழ்கிறது. உதாரணமாக, ஒரு சாகச சவாரி (adventure ride) செய்யும்போது, அட்ரினலின் என்னும் இயக்கு நீரின் (hormone) அளவு அதிகமாகிறது, இது நம் இதயத்தை வேகமாக துடிக்க வழிவகுக்கிறது, இதனால் தசைகள் இறுக்கமாகின்றன, மேலும் நம் உடலில் வியர்வை அதிகரிக்கரிக்கிறது. வழக்கமான தியானப் பயிற்சி இந்த மன அழுத்த இயக்குநீரின் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது.
4. யோக தத்துவத்தை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள்.
பண்டைய யோக அறிவுத்திறன், “இயமம்” மற்றும் “நியமம்” எனப்படும் சில எளிய, ஆயினும் ஆழமான கொள்கைகளை அறிவுறுத்துகின்றன. இவைகளை பற்றி அறிந்து, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும். உதாரணத்திற்கு, “சந்தோஷ தத்துவம்” (நியமம்) மனநிறைவின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கிறது. பேராசை அல்லது அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமாளிக்க “அபரிக்ரஹா” கொள்கை நமக்கு உதவும். இம்மாதிரியான பேராசை, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், “ஷௌசம்” என்ற கொள்கை மனம் மற்றும் உடலின் தூய்மையைப் பற்றி பேசுகிறது. தொற்று நோய்களால் பாதிப்பு ஏற்படும் பயத்திலிருந்து மீள இந்த விதி முக்கியமாக உதவும். யோகக் கலையின் யம, நியமங்களைப் பின்பற்றுவது சத்தான உணவை உண்ணவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும் உதவும். இது கவலை மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதில் கணிசமாக பங்களிக்கிறது. யோக தத்துவத்தைப் புரிந்து கொள்ள, பதஞ்சலி யோக சூத்திரங்கள் குறித்த குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வர்ணனையைப் படித்து அறிந்துகொள்ளலாம்.
5. பிரார்த்தனை, நம்பிக்கை, மாறாத புன்னகை
பிரார்த்தனை, உங்களுக்கு மன அழுத்தமற்று இருப்பதற்கான உறுதியையும், ஆதரவையும் அளிக்கும் . தினசரி பிரார்த்தனை, மந்திர உச்சாடனம், பஜனைப்பாடல்கள் பாடுதல் போன்ற பழக்கங்களை வளர்ப்பதால், உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் நிரம்புகிறது. மேலும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. “நடப்பவை எல்லாம் நன்மைக்கே”, நடக்கிறது மற்றும் “எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உயர்ந்த தெய்வீக சக்தி ஒன்று உள்ளது” என்ற ஆழமான நம்பிக்கையின் உணர்வை இவை ஏற்படுத்துகின்றன. மேலும் மேலும் புன்னகைக்க பிரயத்தனம் செய்யுங்கள். இது தன்னம்பிக்கை, அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களை உடனடியாக ஏற்படுத்தும். இப்போதே தொடங்கவும்!
6. நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்
“நான்”, “எனது” என்ற எண்ணங்களிலேயே எப்போதும் உழன்று கொண்டிருந்தால், மன உளைச்சலும், கவலையும் மிஞ்சும். நமக்கு என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே நாம் மூழ்கியிருக்கிறோம். இதை விடுத்து, நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று கவனத்தைத் திருப்புங்கள். தொண்டு புரிவதில் ஈடுபடுவதால் உங்களுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். அது உங்களுக்கு மிகுந்த ஆழமான இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கும்.
7. உலகின் நிரந்தரம் அற்ற தன்மையை அறிந்து கொள்ளுங்கள்
நம்மை சூழ்ந்து இருக்கும் அனைத்தும் நிரந்தரம் அற்றவை என்றும், அவை மாறிக்கொண்டேதான் இருக்கும் என்னும் புரிதல் வந்து விட்டால், மனம் ஓய்வடைகிறது, மன நிம்மதி அடைவோம். “இதுவும் கடந்து போகும், என்றென்றும் நிலைக்காது” என்ற உணர்வு நமக்குள் எழுந்து கவலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. வாழ்க்கையின் இந்த அடிப்படைக் கோட்பாட்டைக் காண தியானம் நமக்கு உதவும்.
8. கடந்த காலத்தில் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டு இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
இந்த சூழ்நிலையைக் கூட உங்களால் கடந்து செல்ல முடியும் என்ற அபரிமிதமான தைரியத்தை இது உண்டாக்குகிறது. இதனை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்.
9. நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் உங்கள் அருகில் இருக்கட்டும்.
நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் அதிக நேரம் செலவிட்டால், அதே மனோ நிலை உங்களுக்கும் வருகிறது. இது உங்கள் வாழ்க்கையின் அணுகுமுறையில் நன்கு பிரதிபலிக்கிறது. நேர்மறையான மனம் மட்டுமே மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஓய்வான நிலையை வளர்க்க முடியும்.
இந்த கட்டுரை ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரான டாக்டர் சேஜல் ஷாவின் உள்ளீடுகளின் அடிப்படையில் பிரித்திகா நாயர் அவர்களால் எழுதப்பட்டது.





